தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் எழுச்சிபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
வெள்ளிக்கிழமை 27-11-2020 மாலை 5.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு Blacktown Bowman Hall எனும் மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச்சுடரினை மட்டுநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட, 1998 மே 23ஆம் நாள் வீர காவியமாகிய சண்முகம் சந்திரறோகான் என அழைக்கப்படும், கப்டன் புவிராஜ் அவர்களது சகோதரி சந்திரப்பிரபா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் செயற்பட்டுவருபவரும் தமிழர் செயற்பாட்டாளருமான துர்க்கா ஓவன் அவர்களும், அவுஸ்திரேலிய தேசியக் கொடியை NSW மாநில Prospect தொகுதி உறுப்பினரும், தமிழருக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும், Dr Hugh McDermott அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை 2006ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஏழாம் நாள் வீரச்சாவடைந்த யாழ் மாவட்டம் வீரசிங்கம் இரத்தினக்குமார் என அழைக்கப்படும் லெப் கேணல் எழில்கண்ணன் அவர்களின் மகள் கதிரினி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, திருமலை இலுப்பைச்சோலை பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் 1999ஆம் ஆண்டு, செப்ரம்பர் மாதம் 12ஆம் திகதி வீர மரணமெய்திய குச்சவெளி திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட முகுந்தன் முத்துலிங்கம் என அழைக்கப்படும் கப்டன் இளங்கதிர் அவர்களின் தந்தையார் திரு முத்துலிங்கம் அவர்கள் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி வைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர் மற்றும் உரித்துடையோர் தங்கள் மனங்களில் மாவீரர்களை நினைவேந்தி வணங்கினர்.
கோவிட் இடர்கால நிலையிலும் சமூக இடைவெளியை பேணியவாறு பல நூற்றுக்கணக்கான மக்கள் படிப்படியாக வரிசையாக வருகைதந்து மாவீர்களுக்கு தங்கள் நினைவேந்தல்களை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவீரர் நினைவு வெளியீடுகளும் தமிழக ஓவியர் புகழேந்தியின் “நான் கண்ட போராளிகள்” என்ற நூலும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வு இரவு 8.30 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நிறைவடைந்து.
இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு
https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia
No comments:
Post a Comment