நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு சிட்னியில் இன்று 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இன்று சிட்னியில் நடைபெற்றுள்ளது. பெண்டில்கில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வை, தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் அவர்களின் சகோதரன் யோகநாதன் அவர்கள் மாலை 5.15 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.
தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை நவேந்திரா காளிராசா
ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை அருணகிரிநாதன் கிருஷ்ணபிள்ளை ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து
நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து அகவணக்கம்
செலுத்தப்பட்டது.
அனைவரும் வரிசையாக சென்று நாட்டுப்பற்றாளர்களினதும் மாவீரர்களினதும்
திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அன்னை பூபதியின் தியாக
வரலாற்றை பதிவுசெய்யும் உரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் பிறைக்குமரன் பேரின்பராசாவும்
கவிவேந்தன் பாலகுமாரும் வழங்கினர்.
அடுத்ததாக, தாயகத்தாய் இறுவட்டிலிருந்து தாயவளே உன்னை போற்றுகின்றோம்
என்ற பாடலுக்கு சகோதரிகள் துளசி செல்வராசா, நிதுர்சி செல்வராசா, மோகிதா செல்வராசா மற்றும்
திவாசினி சிவராசா ஆகியோர் வழங்கினர். இந்நடனத்திற்கான நெறியாள்கையை குறுகிய காலத்தில்
ஆசிரியர் சிவசோபா தர்சன் அவர்கள் செய்திருந்தார்.
அடுத்து, மறைந்த மன்னார் மறைமாவட்ட வணக்கத்துக்குரிய ஆண்டகை
இராயப்பு யோசப் அவர்களின் நினைவான நினைவுப்பகிர்வை சோனா பிறின்ஸ் அவர்கள் வழங்கினார்.
அவர் தனதுரையில் ஒரு ஆண்டகையாக இருந்தவாறு பல்வேறு நெருக்குதல்களுக்கும் மத்தியில்
நேர்மையான முறையில் செயற்பட்டு தமிழ்மக்களின் நீதிக்காக எப்போதும் குரல்கொடுத்துக்கொண்டிருந்தார்
என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின்
நீதிக்காக கடுமையாக உழைத்துநின்றார் எனவும் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து, நாட்டுப்பற்றாளர்கள் தொடர்பான நினைவுப்பகிர்வை
சுதர்சன் அவர்கள் வழங்கினார். அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை
கட்டமைத்து நெறிப்படுத்திய மாமனிதர் ஜெயகுமார், தாயகம் சென்று சர்வதேச அரசியல் கட்டமைப்புகளுக்கு
உதவிபுரிந்த நாட்டுப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி, வெளிநாட்டுக்கிளைகளின் கணக்காய்வுகளை
மேற்கொண்டு அர்ப்பணிப்போடு செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் ஆகியோர்களின்
நினைவுகளை பதிவு செய்தார்.
அடுத்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள
தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் தொடர்பான விளக்கத்தை அருணகிரிநாதன் வழங்கினார்.
இறுதியாக தேசியக்கொடியிறக்கலோடு நினைவு நிகழ்வு நிறைவடைந்தது.
இன்றைய நிகழ்வை யாழவன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment