பன்னிரு நாட்கள் தன்னை மெல்ல மெல்ல உருக்கி உணவின்றி நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு கொறானா வைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு இணையவழியிலான நினைவு வணக்க நிகழ்வு 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
"மலர்தூவ வாருங்கள்" என்ற நினைவுவணக்க பாடலுடன் ஆரம்பித்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டபின்னர் தியாகி திலீபன் நினைவுகளை சுமந்த தியாகதீபம் என்ற காணொளி திரையிடப்பட்டது. அடுத்ததாக தியாகி திலீபன் நினைவுப்பாடல் ஒன்றை சிட்னியைச் சேர்ந்த ஜெய்கரன் யோகேஸ்வரன் அவர்கள் பாடினார். இதற்கான பாடல்வரிகளை மெல்பேர்ணைச் சேர்ந்த பகீரதன் எழுதியிருந்தார். தொடர்ந்து சிட்னி தமிழ் உறவு ஒருவர் கவிதை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் ஆறு மாநிலங்களிலிருந்து பங்குகொண்ட பன்னிரண்டு இளையோர்களின் "தியாகி திலீபன் பேசுகின்றேன்" என்ற பதிவு தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டது. அடுத்ததாக தமிழ் இளையோர் சார்பில் தியாகி திலீபன் நினைவுரையை றேணுகா இன்பகுமார் அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கினார். தொடர்ந்து சிட்னியைச் சேர்ந்த சிறிகுமார் அவர்கள் தியாகி திலீபனின் அர்ப்பணிப்பு தொடர்பான சிறிய பதிவு ஒன்றை வழங்கினார்.
நிறைவாக உறுதியுரையுடன் நினைவுவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்ததுடன் இந்நிகழ்வை தமிழ்ச்செயற்பாட்டாளர் யாழவன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்.
நியுசவுத் வேல்ஸ் மாநிலத்திலும் விக்ரோரியா மாநிலத்திலும் மண்டப நிகழ்வாக நடைபெறாத நிலையில் தெற்கு அவுஸ்திரேலியா மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் மண்டப நிகழ்வாகவும் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment