தாயகவிடுதலைப்போராட்டத்தில் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களை ஒருசேர நினைவுகூருகின்ற தமிழீழ மாவீரர்நாள் இவ்வாண்டும் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மாலை 5.00 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு இளைய செயற்பாட்டாளர் செல்வி. மது பாலசண்முகம் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் திரு.கருணாநிதி தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார். அவுஸ்திரேலியத் தேசியக்கொடியினை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் திரு. பங்குணராதன் மதனகுமார் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியினை மாவீரர் வீரவேங்கை சரத்பாபுவின் தந்தையார் திரு.வைரவிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தாயகவிடுதலைப்போரில் முதற்களப்பலியாகிய லெப் சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் வீரவேங்கை சிவகுமார் அவர்களின் சகோதரன் நகுலேஸ்வரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைக்க, முதற்பெண்மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களது திருவுருவப்படத்திற்கு திருமதி. கோகிலவதனி அந்தோனிப்பிள்ளை அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து அகவணக்கமும் துயிலுமில்லப்பாடலும் இடம்பெற்றது.
தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பொதுமக்கள் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
பொதுமக்களின் மலர்வணக்கம் இரவு 8.00 மணிவரையிலும் நடைபெற்றது.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. சமகால கோவிட் நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு மாலை 5 தொடக்கம் 8 மணி வரை பொதுமக்கள் வந்து மாவீரர் வணக்க செலுத்தக்கூடிய ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் வழமைபோல காந்தள் புத்தகம் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் ஏனைய வெளியீடுகளும் விற்பனை செய்யப்பட்டன.
No comments:
Post a Comment