"மாமனிதர்" மருத்துவர் பொன் சத்தியநாதன் - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2017

"மாமனிதர்" மருத்துவர் பொன் சத்தியநாதன்


தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.


காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.


தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல் தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ஒரு புள்ளியை நோக்கியதாகவே அமைந்திருந்தன. அப்புள்ளியானது தமிழினம் தனது அரசுரிமையைப் பெற்றுக்கொள்வதாகவே அமைய முடியும். அவ்வகையில் மருத்துவர் பொன். சத்தியநாதனின் தமிழர் இறைமை மீட்புப் பங்களிப்பென்பது அளவிட முடியாதது. குறிப்பாக எமது ஈழவிடுதலைப் போராட்டத்தின்பால் அவர் கொண்டிருந்த பேரன்பும் அர்ப்பணிப்பும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. தமிழினத்தினதும் தமிழ்மொழியினதும் பாதுகாப்பும் வளர்ச்சியும் ஈழநாடு அமைவதிலேயே தங்கியிருக்கிறது என்பதை அவர் திடமாக நம்பினார்.  


“அவ்வகையில் அவர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும், அதன் தலைமைமீதும் ஆழமான நம்பிக்கையையும் பற்றையும் கொண்டிருந்தார். மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களின் விடுதலை வேட்கையும், எமது விடுதலை இயக்கம்பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் என்றும் வீண்போகாது. மருத்துவர் தமிழினத்துக்கும் எமது விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக அவருக்கு அதியுயர் விருதான 'மாமனிதர்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.


அதனைத் தொடர்ந்து உரையாற்றிய திரு. செந்தூரன் அவர்கள்,  மருத்துவர் பொன். சத்தியநாதனின் செயற்பாடுகளை விரிவாக விளக்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றினார். அவர் தனதுரையில் அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மெல்பேர்ண் அலுவலகத்தை நிறுவுவதற்கான மிக முக்கிய பங்களிப்பை வழங்கி அதற்கான அடித்தளத்தை உருவாக்கினார் எனவும், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதற்காக பலதரப்பட்டவர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணினார் எனவும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் முகிலரசனின் இசையில் சிறிவிஜய் பாடி பொன். சத்தியநாதன் அவர்களின் நினைவாக எழுதப்பட்ட சிறப்புப்பாடல் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. அத்தோடு மாமனிதர் பொன். சத்தியநாதன் அவர்கள் நினைவாக ‘தணியாத தமிழ்த் தாகன்’ என்ற சிறப்பு நூலும்  இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.


இந்நூலில் மாமனிதர் பொன். சத்தியநாதன் அவர்களுக்காக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், முனைவர் கு.அரசேந்திரன், ஓவியர் புகழேந்தி, நடிகர் சிவகுமார் மற்றும் அவுஸ்திரேலியா தமிழர் அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்ட இரங்கற்செய்திகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.


பின்னர், சமய வழிபாடுகளுடன் வணக்க நிகழ்வு நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் மெல்பேணின் பல பகுதிகளிலும், ஓஸ்ரேலியாவின் மற்றைய பிராந்தியங்களிலும், மற்றைய நாடுகளிலும் இருந்து வந்த பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொன். சத்தியநாதன் அவர்களுக்குத் தமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மாமனிதர் பொன். சத்தியநாதன் அவர்களின் மறைவையொட்டி அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


மாமனிதர் மருத்துவர் பொன். சத்தியநாதன்


எப்போதுமே ஓய்வற்று பொதுப்பணிக்காக தன்னை அர்ப்பணித்த தமிழ்ப்பற்றாளர் மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களின் துயரமான மறைவு தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்.

தமிழீழத் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் தமிழ்மக்கள் அனைவரையுமே உயிரை அர்ப்பணித்துப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னே அணிதிரட்டியது.


தமிழ் மக்களின் விடுதலை என்பது அதன் அடிப்படையான மண்விடுதலை மூலமே சாத்தியமாகும் என்பதை ஆழமாக விளங்கிக்கொண்ட மருத்துவர், அந்த நில விடுதலைக்காக போராட்டத்துடன் தன்னை ஆழமாக இணைத்துக் கொண்டார்.


சுதந்திரமான தாயகத்தில் தமிழ்மொழியைப் பாதுகாத்து தமிழ்த் தேசிய அடையாளங்களைப் பேணி சீரிய பண்புள்ள சமுதாயமாக தமிழினம் வாழவேண்டும் வளரவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்ததது.


தன்னைத் தேடி வரும் மக்களுக்கு உதவி செய்வதோடு நின்றுவிடாது தான் தேடிச் சென்று உதவும் தாராளமனம் படைத்தவராக மொழியால் அனைவரையும் இணைத்தவராக அனைவரும் போற்றிய பெருமனிதனாக அவர் வாழ்ந்தார்.


தனக்காக எதுவும் சேர்த்துவைத்துப் பொருள் தேடவேண்டும் என்ற தனிமனித ஆசைகளைத் துறந்து தமிழர் வாழ்வு என்ற பொதுநோக்கிற்காக தனது நேரங்களை தனது சொத்துக்களை முழுமையாகவே செலவழித்தார்.


ஒப்புயர்வற்ற தியாகங்களைப் புரிந்த விடுதலை இயக்கத்தின் மீதும் அதன் தலைமை மீதும் அளவற்ற பெருமதிப்பைக் கொண்டிருந்த அவர் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல பணிகளை அவர்களுடன் இணைந்து மேற்கொண்டார்.


தமிழ்மொழிக்கான நவீன தொழிநுட்ப ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த அவர் அந்தப்பணிகளை முழுமைப்படுத்துவதற்காகக் கடுமையாக ஓய்வற்று உழைத்துக்கொண்டிருந்தார்.

இன்று நாம் அந்தப் பெருமனிதனை இழந்துவிட்டோம். இவரது தொடர் பயணத்தில் எப்போதுமே புன்முறுவலுடன் இணைந்து நின்ற அவரது துணைவியார் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரது துயரத்திலும் நாமும் பங்குகொள்கின்றோம். 


அன்னாரை இழந்து மனம் கலங்கும் இதே வேளை எமது இனவிடுதலைக்காகவும் மொழிக்காப்புக்காகவும் தொடர்ந்து உழைப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்.


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – அவுஸ்திரேலியா













No comments:

Post a Comment

Post Bottom Ad