பசுமைக்கட்சியில் செனட் வேட்பாளராக போட்டியிடும் அலன் சூபிரிட்ஜ் உரையாற்றும்போது, "பாரிய இனவழிப்பைச் செய்த சிறிலங்கா அரசு தொடர்ந்தும் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கை ஆறு தமிழர்களுக்கு ஒரு இராணுவத்தினன் என்ற வகையில் இராணுவமயப்படுத்தி தமிழர்களின் பாதுகாப்பு உயிர் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதனால் தான் தமிழ் அகதிகள் அடைக்கலம் தேடிவருகின்றார்கள் என்பதை அவுஸ்திரேலிய அரசு உணர்ந்துகொள்ளவேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கவாதியும் ஆசியருமான மொய்ரா உரையாற்றும்போது, எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்தும் அந்த உரிமைகளுக்காக போராடவேண்டும் என்பதே நியதி என்றும் அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர்தப்பிய வினோ அவர்கள் உரையாற்றும்போது,
குண்டுகள் வெடித்ததில் சில குழந்தைகள் தாயின் வயிற்றில் இறந்தன. சில குழந்தைகள் உடனடியாக தப்பியபோதும் உட்காயங்கள் காரணமாக சில வாரங்களில் இறந்தனர். இந்த குழந்தைகள் புதைக்கப்படக்கூட முடியாமல் பதுங்கு குழிககளின் இடிபாடுகளுடன் விடப்பட்டது. சில குழந்தைகள் தங்கள் தாய் இறந்ததை உணராமல் தங்கள் தாயிடமிருந்து பால் குடிக்க முயன்றனர்.
"பாதுகாப்பு வலயம்" எனச்சொல்லப்பட்ட பகுதியில் ஒரு தாய் தனது மூன்று குழந்தைகளை ஷெல் வீச்சில் இழந்ததை நான் நேரில் கண்டேன். இதனால் அவர் மனநிலை பாதிப்படைந்தாள். ஒரு இனப்படுகொலையின் போது ஒரு பிறக்காத குழந்தை அல்லது புதிதாகப் பிறந்த குழந்தையின் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். இவர்களுக்கான நீதிக்காக நாம் குரல் எழுப்பவேண்டும்.
என குறிப்பிட்டார்.
தமிழ் ஏதிலிகள் கழக செயற்பாட்டாளர் நிரோ அவர்கள் உரையாற்றும்போது,
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ள நிலையில், ஊழல் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தெற்கில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றபோது, அந்த அராஜக ஆட்சிக்கு எதிராக இலங்கையர்களுடன் எங்கள் நிலைப்பாட்டில் ஒன்றுபட்ட தன்மை உள்ளது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அல்லது 74 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அரச அடக்குமுறையின் போது தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோது இலங்கையில் மக்கள் எங்கே இருந்தார்கள் என்று சிந்திக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவின் முதல் தேச மக்களைப் போலவே தமிழர்களுக்கும் இப்போது தேவைப்படுவது உண்மையும் நீதியும் தான். உண்மையான நல்லிணக்கமும் ஒற்றுமையும் உருவாக்கப்படுவதற்கு முன்னோடியாக அது அமையும். அத்தகைய பொறிமுறை நிச்சயமாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கவேண்டும்.
எனக்குறிப்பிட்டார்.
தமிழ் ஏதிலிகள் கழகத்தின் செயற்பாட்டாளர் ரேணுகா அவர்கள் உரையாற்றும்போது,
இன்று நான் எங்கள் கொடியை உற்றுப் பார்க்கும்போது, அதைப் பற்றி சிந்திக்கும்போது, தனிநபர்கள் தங்கள் கொடியுடன் நிற்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன், மேலும் அந்தக் கொடி என்னவென்று மக்களுக்குத் தெரியும். ஆனால், பல ஆண்டுகளாக நாங்கள் ஒடுக்கப்பட்டுள்ளோம். நாம் யார் என்பதைக் கொடி சுட்டுகின்றது. நமது தமிழ்த்தேசம் தனக்கான நாட்டை கொண்டிருந்தது. நமது நாட்டிற்காக தமிழ்த்தேசம் தொடர்ந்து போராடும். தமிழ்த்தேசம் ஒருபோதும் அடிபணியாது. நான் கொடியை உற்றுப் பார்க்கும்போது, புலிக்குட்டி ஒன்று தொலைந்து போகும்போது அதன் தாயின் வாசனையைப் பின்தொடர்ந்து தன்தாயை கண்டுகொள்கின்றது என்ற உண்மை எனக்கு நினைவுக்கு வருகிறது.
எங்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்களாகிய நாம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தும் தாய்நாட்டிற்காக போராடுவோம், அதுதான் தமிழீழம். ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்தாலும், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நமது இலக்கை நாம் மறந்துவிட முடியாது, நமது சகோதர சகோதரிகளுக்கு அமைதியான தேசம் என்றால் தனிநாடுதான். நாங்கள் ஈழத் தமிழர்கள். பெரும் சக்திவாய்ந்த வரலாற்றைக் கொண்ட ஒரு தேசத்தின் ஒரு பகுதியாக ஆற்றல் உள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆக நாங்கள் இருக்கிறோம். 1948 முதல் 2009 வரை மரணித்தவர்களின் இரத்தம் பூமியின் வேர்களில் ஊடுருவி, அவர்களின் நித்திய பலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு, எங்களை வெற்றிக்கு வழிகாட்டி எங்களை கவனித்துக்கொண்டே இருக்கின்றார்கள்.
எங்களுடைய தமிழீழத் தேசியத் தலைவரின் கருத்துக்களை இத்துடன் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் - எமக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும், எத்தகைய இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தகைய சக்திகள் எமது பாதையில் நின்றாலும், தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான எமது போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழர்கள், தமிழீழத்தில் தங்களுடைய சகோதர சகோதரிகளின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக, உறுதியாகவும், உறுதியுடனும் குரல் எழுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்குறிப்பிட்டார்
இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் அன்னையர் நாளான இன்று, தாயகத்தில் போராடிவரும் அன்னையர்களுக்கான தமது ஆதரவுக்குரலாகவும் இன்றைய பேரணியில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மிகவும் சிறியவர்களை கூட அழைத்துவந்து பேரணியில் பலரும் குடும்பமாக பங்குகொண்டிருந்தனர். வயோதிப நிலையிலும் தமது பங்களிப்பு இருக்கவேண்டும் என வந்து பேரணியை அர்த்தமுள்ளதாக்கிவாறு பலரும் கான்பராவிலிருந்தும் குடும்பமாக வந்து பேரணியில் பங்குகொண்ட அர்ப்பணிப்பான தன்மையை காணக்கூடியதாக இருந்தது. ஈழத்தமிழர்களின் நீதிக்காக என்றும் இணைந்து நின்றும், குரல்கொடுத்தும் குடும்பமாக வந்து நின்ற பல தமிழ்நாட்டு உறவுகளின் தோழமையும் ஏனைய சமூகத்தவர்களின் பரந்துபட்ட ஈடுபாடும் சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment