நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களிற்கான மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்பான முறையில் இன்று 08-10-2022 சனிக்கிழமை அன்று நண்பகல் 12.15க்கு அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்றது. நிகழ்வை ஆரம்பித்துவைக்கும் முகமாக பொதுச்சுடரை திரு. நரேன் அவர்களும், நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரை திருமதி உமா இராஜேஸ்வரன் அவர்களும் ஏற்றிவைத்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, திருவுருவப்படத்திற்கு திரு. சதீஸ் அவர்கள் மலர் மாலையை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் வரிசையாக சென்று மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து, நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களிற்கான மதிப்பளிப்பு அறிக்கையை திரு. வித்தியாகரன் வால்மேகம் அவர்கள் வாசித்தார். தொடர்ந்து நினைவுரைகளை அமைப்புகள் சார்பிலும் தனிப்பட்டவர்கள் சார்பிலும் பலர் வழங்கினர். அவுஸ்ரேலிய தமிழ்த் தேசிய அமைப்புக்களின் கூட்டறிக்கையினை திரு. வாசன் அவர்கள் வாசித்தார். காணொளி ஊடான நினைவுப்பகிர்வுகளை ஏனைய மாநில மூத்த செயற்பாட்டாளர்கள் வழங்கி இருந்தனர்.
தொடர்ந்து, நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களிற்கு மதிப்பளிக்கும் முகமாக அவரது திருவுருவப்படமும் தமிழீழத் தேசியக்கொடியும் திருமதி. உமா ராஜேஸ்வரன் அவர்களிடம் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை தலைவர் திரு. விமலாதித்தன் நடராஜா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நன்றியுரையைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வருகை தந்தவர்களிற்கு மதியஉணவு வழங்கி உபசரிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment