தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மானமாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வு 27-11-2022 ஞாயிற்றுக்கிழமையன்று அவுஸ்ரேலியா மெல்பேர்ணில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்துகொண்டு மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
Burwood East Reserve விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் இருநூற்றைம்பது மாவீரர்களது திருவுருவப்படங்களுக்கும் தனித்தனியான மாதிரி நினைவுக்கல்லறைகள் தயாரிக்கப்பட்டு மாவீரர்களின் திருவுருவப்படங்கள் அந்நினைவுக்கல்லறைகளில் வைக்கப்பட்டு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் அனுஷ்டித்தமையானது தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுகளை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.
மாலை 6.00 மணிக்கு மணி ஒலி எழுப்பலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு விக்ரோறியாமாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. பிரசாத் மற்றும் இளையசெயற்பாட்டாளர் செல்வி. லக்சிகா கண்ணன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகியது.
முதலில் பிரதான பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பிரதான பொதுச்சுடரினை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.கொற்றவன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை வீரவேங்கை சரத்பாபுவின் சகோதரன் மோகன் சுந்தர் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை லெப்ரினன்ட் படையரசனின் சகோதரன் திரு. வேலாயுதபிள்ளை மகேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ விடுதலைப்போரட்டத்தில் முதற்களப்பலியாகிய மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு லெப். கேணல் கலைமதுரனின் சகோதரன் திரு. வடிவேலு சசிகரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைக்க, முதற்பெண்மாவீரர் 2_ம் லெப் மாலதி அவர்களது திருவுருவப்படத்திற்கு கப்டன் ஜெகனின் சகோதரி திருமதி. நளாயினி நெடுமாறன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய நினைவுக் கல்லறைகளுக்கு அவர்களது பெற்றோர்கள், உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து அகவணக்கமும் துயிலுமில்லப்பாடலும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்துப் பொதுமக்களும் நீண்டவரிசையில் காத்துநின்று மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அடுத்து உறுதியேற்புரை இடம்பெற்றது. உறுதியேற்புரையை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. ரகு கிருஷ்ணபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து "காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல அது உயிருள்ளவர் பாசறை" என்ற பாடலுக்கு மெல்பேர்ண் நடனாலாய பள்ளி மாணவிகள் மாவீரர் வணக்க நடனத்தை அரங்கேற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுக்கவிதை இடம்பெற்றது. மாவீரர் நினைவுக் கவிதையை செல்வி. நம்சிகா சுரேஷ்குமார் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. வசந்தன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சில மாவீரர்களின் களச்செயற்பாடுகள், போர்க்களங்களில் அவர்களது சாதனைகள் அவர்களின் தியாகங்கள் என்பவற்றை விளக்கி தனது நினைவுரையை ஆற்றியிருந்தார்.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு முடிவுரை, உறுதியுரையுடன் மாலை 7.45 மணியளவில் தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. மழை காலப்பகுதியாக இருந்தபோதும் பெருந்திரளாக மக்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டமையும், வெளியீடுகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கியதையும் குறிப்பிடக்தக்கதாக இருந்தன.
No comments:
Post a Comment