தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் அன்னை பூபதி அவர்களின் 35வது வருட நினைவு நாள் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 16-04-2023 அன்று மாலை 5 மணி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இளையோர் சார்பில் துளசி செல்வராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டுப்பற்றாளர் சங்கரண்ணா அவர்களின் சகோதரர் தேவராசா மாஸ்ரர் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் முரளி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நவே அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அன்னை பூபதி அவர்களினதும் ஏனைய நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப் படங்களுக்கு முன்பாக, நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார் ஈகைச்சுடர் ஏற்றினார்.
தொடர்ந்து, தாயக விடுதலைக்கான போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், தமிழீழ மக்களின் உயிர் வாழ்வுக்கான போராட்டத்தில் உறுதுணையாக நின்று பங்களித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் தேசப்பற்றாளர்களையும், எமது மக்களின் விடுதலைக்காக தமிழீழத்திற்கு வெளியே தீயிலே குளித்து ஈகைச்சாவடைந்த ஈகியர்களையும், ஏனைய தியாகிகளையும் நினைவு கூர்ந்தும், போராட்டத்தின் பால் உயிர் நீத்த அனைத்து பொதுமக்களையும் நினைவில் சுமந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
நாட்டுப்பற்றாளர்கள் பற்றிய நினைவுரையை மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளரும் தளபதி கேணல் கிட்டு அவர்களினது சகோதரருமான காந்திதாசன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து, செல்வி தமிழினி சிவராசா அவர்கள் அன்னை பூபதி அவர்களினது தியாகம் பற்றி ஆங்கிலத்தில் சிறு உரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, இளையோர்களான கவிவேந்தன் பாலகுமார் மற்றும் பிறைக்குமரன் பேரின்பராசா ஆகியோர் இணைந்து அன்னை பூபதியின் தியாகத்தின் முக்கியத்துவம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கவுரை வழங்கினர்.
இறுதி நிகழ்வாக இளையோர்கள் பங்குபற்றிய அன்னை பொது அறிவுப்போட்டி அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இரவு 6.45 மணிக்கு தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதியுரை ஏற்போடு நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment