பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் 19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 35-வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பின்புலமாக உழைத்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூருகின்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாளும் 16-04-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பேர்ணில் மிகவம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சென்ஜோண்ஸ் தேவாலய கேட்போர்கூட மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு இளைய செயற்பாட்டாளர் செல்வி. லக்சிகா கண்ணன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை சமூகச்செயற்பாட்டாளர் திரு. சிறீதரன் அருணாசலம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தேசியச் செயற்பாட்டாளர் திரு. தயாநிதி கருணாநிதி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. ரகு கிருஸ்ணபிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு செயற்பாட்டாளர் திருமதி. மேரி பிரசாத் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாமனிதர்களான தில்லை ஜெயக்குமார், பேராசிரியர் எலியேசர், மருத்துவர் சத்தியநாதன், தொழிநுட்பவியலாளர் குணாளன் மாஸ்ரர், நாட்டுப்பற்றாளர்களான கலாநிதி மகேஸ்வரன், தருமராசா, தமிழ்த்தேசியப்பற்றாளர்களான சபேசன் சண்முகம், பாலசிங்கம் சிங்கராஜா, தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு அவர்களது குடும்பத்தவர்களும் உரித்துடையோர்களும் தேசியச்செயற்பாட்டாளர்களும் ஈகைச்சுடர்களேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் தியாகத்தாய் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது. தலைமையுரையைத் தொடர்ந்து ஆரம்பநிலை பள்ளி மாணவியான செல்வி. றியா புஸ்ப்பராசா அவர்களின் தியாகத்தாய் அன்னை பூபதி நினைவுகளைச் சுமந்த நினைவுப்பேச்சு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு. டொமினிக் சந்தியாபிள்ளை அவர்கள் நிகழத்தினார். அவர் தனதுரையில் தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் அறப்போராட்டத்தின் மேன்மையையும் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் தமிழ்த்தேசியப்பற்றாளர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளையும் நினைவுமீட்டி ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உரையாற்றியிருந்தார்.
அடுத்து மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அரசறிவியற்கல்விக்கூடத்தின் ஏற்பாட்டில் இணையம் ஊடாக நடாத்தப்பட்ட தமிழ் இளையோருக்கான இரண்டாவது கற்கைநெறியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இம்மாணவர்களுக்கான சான்றிதழ்களை மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் திருமதி. யோகா ஜெயக்குமார் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
அடுத்து, சிறப்பு நிகழ்வாக பள்ளி மாணவர்களுக்கிடையிலான அன்னை பூபதி நினைவு பொதுஅறிவுப்போட்டி இடம்பெற்றது. இதனை திரு. றமணன் நெறிப்படுத்தினார். எல்லாளன் அணி, சங்கிலியன்அணி, பண்டாரவன்னியன்அணி என மூன்று அணிகளுக்கிடையிலாக நடைபெற்ற இப்போட்டியில் முதலாவது இடத்தை சங்கிலியன் அணியும், இரண்டாவது இடத்தை பண்டாரவன்னியன் அணியும், மூன்றாவது இடத்தை எல்லாளன் அணியும் தடடிக்கொண்டது.
அடுத்து, பொதுஅறிவுப் போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கான பரிசில்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்களுக்கான பரிசில்கள் சான்றிதழ்களை சமூகச்செயற்பாட்டாளர் திரு. சிறீதரன் அருணாசலம் அவர்களும், தமிழ்த்தேசியப்பற்றாளர் சிங்கராஜா அவர்களது துணைவியார் திருமதி. உதயா சிங்கராஜா அவர்களும் வழங்கி கௌரவித்தனர்.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, உறுதியுரையுடன் இரவு 8.10இற்கு தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.
No comments:
Post a Comment