21ம் நூற்றாண்டில் தமிழினம் சந்தித்த மிகப்பெரிய மனிதப் பேரவலமான முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு பேர்த்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சிறிலங்கா பேரினவாத அரசு தமிழனம் மீது பன்னெடுங்காலமாக கட்டவிழ்த்து விட்ட இனவழிப்பின் உச்சம் தொட்டதான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மற்றும் தமிழின படுகொலைகளில் உயிரிழந்த அனைத்து தமிழர்களை நினைவுகூரும் நாளான மே 18 நினைவு நாள் 18-05-2023 வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு பேர்த் கெல்ம்ஸ்கோட் மண்டபத்தில் நினைவுகூரப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுச்சுடரினை திரு. அருள்மாரியம்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக் கொடியை திரு. சிவமைந்தன் அவர்களும் அவுஸ்திரேலிய பூர்வீக மக்கள் கொடியை திரு. ரவி அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியை திரு. திருச்செல்வம் சதாசிவம் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழின அழிப்பில் உயிரிழந்தோருக்கான ஈகைச்சுடரினை பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மாதிரி பீடத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை கடந்து வந்த செல்வி. தர்சனா அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து அகவணக்கமும் அடுத்து முள்ளிவாய்க்கால் பாடல் ஒலிக்க நிகழ்ச்சிக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களினால் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இனவழிப்பு தொடர்பான நினைவுரைகளும் கவிதையும் இடம்பெற்றன.
மாலை 8:15க்கு கொடிகள் இறக்கப்பட்டு தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுக்கு வந்தன.
திரு. நிமலகரன் அவர்கள் தமிழின அழிப்பு நாள் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கினார்.
No comments:
Post a Comment