பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பன்னிருநாட்கள் நீர்கூட அருந்தாது சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 36வது ஆண்டு நினைவேந்தல் தியாகதீப கலைமாலை நிகழ்வு 24 - 09 - 2023 ஞாயிற்றுக்கிழமையன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ண் பெருநகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற Dandenong மாநகரில் Victoria Tamil Community Centre கற்பகதரு மண்டபத்தில் மாலை 6.20 மணியளவில் இளையசெயற்பாட்டாளர் செல்வி. லக்சிகா கண்ணன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை மூத்த சமூகச்செயற்பாட்டாளர் திருமதி. றஞ்சினி சோமசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மூத்த செயற்பாட்டாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை இளைய செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. தட்சிகன் ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாமனிதர் ஜெயக்குமார் அவர்களது துணைவியார் திருமதி. யோகா ஜெயக்குமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
அதனைத் தொடர்ந்து 2001 ம் ஆண்டு இதேநாளில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்ததளபதி கேணல் சங்கர் அவர்களது திருவுருவப் படத்திற்கு மாவீரர் வீரவேங்கை அறிவினி அவர்களது சகோதரன் திரு. குமரன் நாகமணி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
அடுத்து 25 - 08 - 2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத்தழுவிக்கொண்ட கேணல் ராயு அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் கப்டன் நிதர்சன் அவர்களது சகோதரன் திரு டிஜந்தன் நவரட்ணம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்.
தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைவரும் வரிசையாக வந்து உணர்வுபூர்வமாக திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து வணக்கநடனம் இடம்பெற்றது. நடனஆசிரியை திருமதி மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலயா பள்ளிமாணவிகள் "விழிகளில் பொழிவது அருவிகளா.. வீரன் திலீபன் நினைவுகளா...." என்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுப் பாடலுக்கான வணக்க நடனத்தை வழங்கினார்கள்.
தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை மூத்த செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக தேர்வுசெய்யப்பட்டு பின்னர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து, யாழ்மாவட்ட அரசியல்ப்பொறுப்பாளராக அவர் முன்னெடுத்த பணிகள் தொடர்பாக சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து தியாகதீபம் லெப் கேணல் அவர்களது உரைகளையும் நினைவுகளையும் உள்ளடக்கிய குறுங் காணொளித்தொகுப்பு அகலத்திரையில் திரையிடப்பட்டது.
அடுத்து இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வான உள்ளூர்க் கலைஞர்களின் பின்னணி இசையமைப்பில் தாயகப் பாடல்களை உள்ளடக்கிய தியாகதீப கலைமாலை இடம்பெற்றது. தாயகப் பாடல்களை கலைமாலை நிகழ்வின் முன்னணிப் பாடகர்களான சஜிந்தன், சுரேஸ், சீவராஜா, ஹரிணி, மதுரா ஆகியோர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக பாடினார்கள்.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் இரவு 8.15 மணியளவில் தியாகதீபம் கலைமாலை 2023 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment