தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக அரசியல் வேலைத்திட்டங்கள், மாவீரர் மற்றும் போராளி குடும்பங்களுக்கான உதவித்திட்டங்கள், அனைத்துலக ரீதியாக இணைந்த தாயக திட்டங்கள் என பல பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், அண்மைக்காலமாக சிட்னியில், தமிழீழ அரசியல் துறை என்ற பெயரில் சில குழப்பமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி குழப்பமான செயற்பாடுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை செய்தோம். காலப்போக்கில் தவறினை புரிந்துகொள்வார்கள் எனவும் கருதியிருந்தோம். எனினும் தொடர்ச்சியாக பல குழப்பங்கள் ஏற்பட்டுவந்த நிலையில், பலரும் இதுபற்றிய தெளிவுபடுத்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதன் அடிப்படையில் பொறுப்புணர்வோடு இந்த தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிடுகின்றோம்.
தமிழ் உறவுகளுக்கான தெளிவுபடுத்தல் அறிக்கை
உன்னதமான எமது விடுதலை இயக்கத்தின் பெயரை, தவறான முறையில் தமிழர் வரலாற்றில் பதியவைத்துவிட வேண்டும் என பல சக்திகள் பின்னணியில் நிகழ்ச்சி நிரல் அமைத்து செயற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக விளக்கங்களை முன்வைக்கவேண்டிய கடமை எமக்குண்டு.
அன்பான உறவுகளே,
அமைதியான வழிமுறையில் தமிழீழ மக்கள் முன்னெடுத்த நியாயமான உரிமைகளுக்கான போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டன. இதனால் தமிழீழ மக்களின் ஆணையை ஏற்று ஆயுத முறையில் விடுதலைக்கான போராட்டம் வீச்சு பெற்றது. அதன் தலைமைச் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை விரைவுபடுத்தினர். ஆனால் சர்வதேச நாடுகளின் துணையோடு, எமது விடுதலை இயக்கத்தின் ஆயுத விடுதலைப் போராட்டம் மௌனிக்கவைக்கப்பட்டது. மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி, ஒரு இனத்தின் விடுதலைக்கான போராட்டம் முடக்கப்பட்டது.
இத்தகைய கொடும் இனவழிப்பு நடத்தி முடிக்கப்பட்டதன் பின்னணியிலும், தியாக வரலாற்றை நிகழ்த்திய வீரர்களாகவே மாவீரர்களும் அதன் நாயகராக தேசியத்தலைவரும் அனைத்து தமிழ் மக்களின் மத்தியில் நிலைபெற்று நிற்கின்றார்கள். அடக்குமுறை மத்தியிலும் நீறு பூத்த நெருப்பாக விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் உன்னதமாக போற்றப்பட்டு நிலைத்து நிற்கின்றது. மாவீரர்களின் தியாகத்தையும் தலைவரின் அர்ப்பணிப்பான வரலாற்றையும் பார்த்து, எதிரிகளும் பிரமித்துப்போய் நிற்கின்றார்கள்.
இத்தகைய உன்னதமான விடுதலை இயக்கத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தாமல், தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான வேட்கையையோ அதற்கான விடாமுயற்சியையோ சோர்வடையச் செய்யமுடியாது. அந்த வகையில் தான், பின்வரும் விடயங்களை உங்கள் முன்வைக்கவிரும்புகின்றோம்.
1. தமிழீழ விடுதலைப்புலிகளின் துறைகள் என்ற பெயரில் அண்மைக்காலமாக பல அமைப்புகள் தோற்றம் எடுத்து வருகின்றன. இயக்கத்தின் துறைகள் என்ற பெயரில் சிலரை உள்வாங்கி, அவர்களை இயக்கத்தின் பொறுப்பாளர்களாக அறிவித்து, அதன்பின்னர் அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் உருவாகி அவர்களுக்குள்ளே ஏற்படும் விமர்சனங்களால் அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு இறுதியில் இயக்கம் பற்றிய தவறான விம்பத்தை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது. இதற்கான திட்டங்கள் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது புலம்பெயர் தேசத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2. புனிதமான இயக்கத்தின் கட்டமைப்பென்பது தியாக வரலாற்றில் எழுப்பப்பட்டது. சிலர் தங்களது மேதாவித்தனத்தை காட்டுவதற்காக அதன் பெயரை பயன்படுத்துவதனை, தியாக வரலாற்றைச் சுமந்த போராளிகளும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உயர்ந்த அர்ப்பணிப்பைச் செய்த எவரும் இயக்க மரபுகளை புறந்தள்ளி கட்டுப்பாடுகளை மீறி செயற்படமாட்டார்கள். மக்களுக்கான அர்ப்பணிப்புள்ள எவரும், ஒரு தலைமையின் கீழ், தங்களால் முடிந்த மக்களுக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.
3. ஒவ்வொரு நாடுகளிலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற கட்டமைப்பானது எமது தேசியத் தலைவரால் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான தொடர்பாடல் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டதாகும். அதற்கூடாக பல வேலைத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலதிகமாக செய்யப்படவேண்டிய பணிகளை இனங்கண்டு அதனை செயற்படுத்தவேண்டியது அனைவரதும் பங்களிப்பில் தான் தங்கியுள்ளது. அதனை விடுத்து, இன்னொரு இயக்க கட்டமைப்பை உருவாக்குவது முரண்பாடுகளை உருவாக்கும். அதனால் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு அனுமதிக்கவேண்டாம் என இயக்க மரபோடு செயற்பட்ட அனைவரும் எம்மை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
4. மேலும், தமிழர்கள் வாழும் நாடுகளில் எமது இயக்கத்தின் மீது சில தடைகள் உண்டு. அவற்றை சரியான முறையில் கையாளக்கூடியவாறு எமது செயற்பாடுகள் அமையவேண்டும். அந்தந்த நாடுகளின் சட்டநடைமுறைகளுக்கு ஊடாகவே, அதற்கான விடுதலை அரசியல் நடைபெறவேண்டும். எனவே இந்த விடயத்தில் பொருத்தமான வழிகாட்டல் பின்பற்றப்படவேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றோம்.
5. குறிப்பாக சிட்னியில் போலியான பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்தல், ஆவணங்களை தயார் செய்தல், காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களை முறைப்படி உறுதிப்படுத்தாமல் அவர்கள் வீரச்சாவடைந்ததாக அறிவித்து நினைவு நிகழ்வுகளை செய்தல், இயக்க கட்டுப்பாட்டை மீறி போட்டி இயக்க அமைப்புகளை உருவாக்குவது போன்ற செயற்பாடுகள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதுபற்றி ஆராய்ந்து இத்தகைய செயற்பாடுகளை செய்யவேண்டாம் எனப் பல முறை குறித்த தனிநபர்களை கேட்டுக்கொண்டபோதும், மீள மீள குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இவர்களின் தனிமனித மற்றும் கூட்டுத்தவறுகள் எமது விடுதலை இயக்கத்தின் மீதே தவறான பார்வையை உருவாக்குகின்றது.
6. இவற்றை கவனத்திற்கொண்டு
"தமிழீழ அரசியல் துறை",
"மாவீரர் பணிமனை"
என ஒரு சிலர் இயக்கத்தின் துறைகளின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி செயற்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை எனவும், அப்படி செயற்படுபவர்களை இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி செயற்படவேண்டாம் எனவும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம். அவர்கள் தனியாக பொதுவான பெயர்களில் நிறுவனம் ஒன்றை அமைத்து செயற்படலாமே தவிர, விடுதலை இயக்கத்தின் பெயரை அல்லது அதன் துறைகளின் பெயரில் - தாங்கள் இயக்கத்தின் துறை என சொல்லிக்கொண்டு - செயற்படுவது எமது விடுதலை வரலாற்றை களங்கப்படுத்தும் செயற்பாடாக கருதுகின்றோம்.
அன்பான உறவுகளே,
மாவீரர்களின் தியாகங்களை மதிக்கும் எவரும் தங்களுக்கு மகுடம் சூட்டப்படவேண்டும் என எதிர்பார்க்கமாட்டார்கள். எமது மக்களுக்கான விடுதலைப் பணிகள் ஏராளம் உண்டு. அவற்றை போட்டி போட்டுச் செய்யவேண்டுமே தவிர, போட்டி அமைப்புகள் எமக்கு தேவையில்லை. எங்கள் மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களையும், விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாக ஒளிவீசும் தேசியத்தலைவரையும் நினைவில் கொண்டு தேசிய விடுதலைக்கான பணியில் தொடர்ந்தும் உழைப்போம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
26 - 10 - 2023
No comments:
Post a Comment