வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் ஞாபகார்த்தமாக ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரிலுள்ள East Burwood Reserve மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
07 - 01 - 2024 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மூத்த தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு. ரவிகிருஷ்ணா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை இரு மாவீரர்களின் சகோதரன் திரு. கவிப்பிரியன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு திருமதி. தேவறூபி சுதாகரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, விளையாட்டு விழாவில் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைமைச் தெயற்பாட்டாளர் திரு. வசந்தன் அவர்களது விளக்கக் கருத்துக்களுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கான கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. துடுப்பெடுத்தாட்டப் போட்டிக்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், எதிர்பார்த்ததற்கு மாறாக கடும்மழை பெய்துகொண்டிருந்தமையால் துடுப்பெடுத்தாட்டப்போட்டி பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மழை காரணமாக குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள் நடத்தப்படவில்லை.
மழையையும் பொருட்படுத்தாது உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் பங்கெடுத்த வீரர்கள் மிகவும் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் மைதானத்தில் விளையாடியதை அவதானிக்கமுடிந்தது.
மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்ட சிறுவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன் போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்ட சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
கரப்பந்தாட்டப்போட்டியில் இறுதியாட்டத்திற்குத்தெரிவான அணிகளான தாயகம் அணிக்கும் NTSC அணிக்குமிடையிலான இறுதியாட்டத்தில் தாயகம் அணி வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தை தனதாக்கிக்கொண்டது.
உதைபந்தாட்டப்போட்டியில் இறுதியாட்டத்திற்குத்தெரிவான மில்லர் அணிக்கும் சிட்னி நகரிலிருந்து வருகைதந்த கரிகாலன் அணிக்குமிடையிலான இறுதியாட்டத்தில் 2 இற்கு 1 என்ற அடிப்படையில் மில்லர் அணி வெற்றியீட்டி வெற்றிக்கேடயய்தை தனதாக்கிக்கொண்டது.
சமநேரத்தில் வழமைபோல தாயக உணவுவகைகளான தோசை, வடை, பூரி முதலானவற்றோடு மதிய உணவாக கடலுணவுகள் கலந்த ஒடியற்கூழும் மாலை உணவாக கொத்துரொட்டியும் மற்றும் குளிர்பானங்கள், தேனீர் என்பனவும் காலையிலிருந்து மாலைவரை விற்பனைசெய்யப்பட்டன.
இறுதியாட்டத்திற்குத் தேர்வான அணிகளின் விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு மாலை 6.00 மணியளவில் தமிழர் விளையாட்டுவிழா இனிதேநிறைவேறியது.
No comments:
Post a Comment