பொங்கல் நாளில் சாதனை படைத்த சிட்னி பொங்கல் திருவிழா 🌞🌞🌞 - TCC AU

TCC AU

TCC Australia - committed to work with all local Tamil organisations to empower Tamil Community here in Australia and all over the world

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

பொங்கல் நாளில் சாதனை படைத்த சிட்னி பொங்கல் திருவிழா 🌞🌞🌞

நியு சவுத்வேல்ஸ் தமிழ் மக்கள் சார்பாக, பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு 33 தமிழர் அமைப்புகள் இணைந்து, சிட்னி பொங்கல் திருவிழா நிகழ்வு பொங்கல் நாளான 15-01-2024 திங்கட்கிழமை அன்று, மாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு, தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், மொறிசியஸ் பின்னணி கொண்ட தமிழர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், நியு சவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர்கள், மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அன்ரூ சாள்ற்றன் மறறும் ஏனைய சமூகங்களை சேர்ந்த நண்பர்களும் பங்குகொண்டிருந்தனர்.
கடும் மழைக்கு மத்தியிலும், ஐம்பது பானைகளில் பொங்கல் செய்து படையல் மேற்கொள்ளப்பட்டதுடன், 100 இற்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலைநிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவுஸ்திரேலிய பூர்வகுடிகளும் இணைந்துகொண்டு பொங்கல் பானையில் பொங்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
வருகைதந்த பூர்வகுடி தலைவர்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் வரவேற்று கௌரவிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளாக, சிறார்கள் மற்றும் பெரியவர்களின் நடன நிகழ்வு, பாடல், பாரம்பரிய ஆடல் என்பனவும் கோலப்போட்டி, உறி அடித்தல் போட்டி, வினோதஉடை (மாறுவேட) போட்டி என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டு உயர்தர பாடசாலை தேர்வில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள், நீண்டகாலமாக தமிழ்மொழியை கற்பித்த ஆசிரியர், தலைப்பொங்கல் தம்பதிகள், தலைப்பிள்ளை பெற்றெடுத்த பெற்றோர், சிறந்த பொங்கல் பானைக்கான சிறப்பு பரிசில்கள் என பலர் பரிசில் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்தோடு சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற அதிட்டச்சீட்டுக்கான போட்டியில் முதலாவது பரிசாக 2 பவுண் தங்கநகையும், இரண்டாவது பரிசாக 1.5 பவுண் தங்கநகையும், மூன்றாவது பரிசாக 1 பவுண் தங்கநகையும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், விலங்குபண்ணை (animal farm), துள்ளல் மேடை(jumping castle) என்பனவும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
வருகை தந்த அனைவருக்கும் பொங்கல் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. விற்பனைக்கான உணவு நிலையங்களும், வணிகநிலையங்கள் அமைப்புகளின் தகவல் மையங்கள் என பல அமைக்கப்பட்டிருந்தன.
கடும் மழை காரணமாக கிளித்தட்டுப் போட்டிகளும் கபடி காட்சி விளையாட்டும், சிறுவர் விளையாட்டுகளும் நடைபெறவில்லல. அப்போட்டிகள் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் இன்னும் சிறப்பாக நடத்தப்பட்டு, பரிசில்கள் வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை பொங்கல் ஏற்பாட்டுக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு, தமிழர் பாரம்பரிய உடைகளோடு கலந்துகொண்ட ஒரு குடும்பத்திற்கான சிறப்பு பரிசிலும், பொங்கல் நிகழ்விற்கு தாங்களாகவே சிற்றுண்டிகளை தயாரித்துக்கொண்டு வந்திருந்தவர்களில் மூவருக்கு சிறப்பு சிற்றுண்டிகளுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக, நவம்பர் 2023 இல் 15 நாட்கள் ஏதிலிகளின் நீதிக்காக கான்பரா நோக்கி நடைபயணம் மேற்கொண்ட பெண்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைக்க உதவிய தமிழர் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், கடும் மழைக்கு மத்தியிலும் கலந்துகொண்ட மக்கள், வணிக நிறுவனங்கள், அதிட்டச்சீட்டு விற்பனைக்கான பிரதான அனுசரணையாளரான லிபரா நகைக்கடை நிலையத்தினர், பொங்கல் இடத்தை வழங்கி வைத்த கம்பர்லாந்து நகரசபை நிர்வாகத்தினர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.



















































































































































சிட்னி பொங்கல் 2023 பற்றிய செய்தி

No comments:

Post a Comment

Post Bottom Ad