பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கப்பிள்ளையார் ஆலயமுன்றலில் 19 - 03 - 1988 முதல் 19 - 04 - 1988 வரையான முப்பதுநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 36வது ஆண்டு நினைவுநாளும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் நினைவுநாளும் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மெல்பேர்ண் நகரிலுள்ள Heidelberg எனும் புறநகரப்பகுதியில் அமையப்பெற்றுள்ள சென் ஜோன்ஸ் தேவாலய மண்டபத்தில் 13 - 04 - 2024 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. றகு கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு. டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை முனைவர் இரவிபாகினி ஜெகநாதன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. சஜிந்தன் குணராசா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு திருமதி. தேவறூபி சுதாகரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுதியதையடுத்து மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் ஆகியோர்களது திருவுருவப்படங்களுக்கு அவரவர் குடும்பத்தவர்கள், உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர்களால் ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து நினைவுரையை திருமதி. தேவறூபி சுதாகரன் அவர்கள் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் சிறப்புரையை முனைவர் இரவிபாகினி ஜெகநாதன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் "தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஒரு மக்கள் போராட்டம்" என்று விழித்து தனது சிறப்புரையை நிகழ்த்தியிருந்தார்.
இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாலை 7.30 மணியளவில் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் நினைவு நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.
இன்றைய நிகழ்வில், அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் வாழ்ந்து தமிழ்த்தேசிய பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்டிருந்து அமரத்துவம் அடைந்த நான்கு தமிழ்த்தேசியப்பற்றாளர்ளும் அவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டு நினைவுகூரப்பட்டனர்.
தமிழ்த்தேசியப்பற்றாளர் சோமா சோமசுந்தரம் (30-04-1944 – 17-09-2012)
==================================================================
சோமா சோமசுந்தரம் என்று அழைக்கப்படும் சோமா அண்ணா அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த 70களின் பிற்பகுதியிலியிருந்து மெல்பேர்ண் தமிழ்ச் சமூகத்துக்கு தனது பணிகளை மேற்கொண்டுவந்திருந்தார். மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களின் தலைமையில் இலங்கை மக்கள் அனைவருக்குமாக மெல்பனில் இயங்கிய ஸ்ரீலங்கா சங்கம் என்பதிலிருந்து, விக்டோரியா ஈழத் தமிழ்ச் சங்கத்தை தனியாக உருவமைத்து (தற்போது விக்ரோரியா தமிழ்ச் சங்கம்), அதன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான தனிப்பட்ட பிரத்தியேக தேவைகளை பூர்த்தி செய்யும் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
அத்தோடு அவுஸ்திரேலியாவில் தென் துருவச் சங்கத்தை உருவமைத்து அதில் அவுஸ்திரேலியா நியூசிலாந்து பப்பூவா நியுகினி போன்ற நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளையும் உள்வாங்கி ஒரு பாரிய கட்டமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக செயல்பட்டிருந்தார். 1983 ஜூலை இனவழிப்பின்போது, அவுஸ்திரேலியா அரசுடன் நேரடிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு அவுஸ்திரேலியாவில் முதன் முறையாக தமிழ் அகதிகள் புலம்பெயரும் ஒரு வழிமுறையை உருவாக்கி, அதன் மூலம் தமிழ் மக்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கு வழிகளை ஏற்படுத்தியிருந்தார். இந்த விசேட மனிதாபிமான திட்டம் என்ற அடிப்படையில் 500 தமிழ்க் குடும்பங்கள் உடனடியாக வருவதற்கான வழிவகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கறுப்பு ஜூலை இனவழிப்பை தொடர்ந்து, தமிழ் மக்களின் அரசியல் சுதந்திர போராட்டத்திற்கான அரசியல் ரீதியான ஆதரவுப் பணிகளில் அவுஸ்திரேலியா அரசோடும் அதன் துறைகளோடும் தொடர்புகளை பேணி, எமது தாயக மக்களின் பிரச்சனைகளை வெழிக்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்தார். மாமனிதர் ஜெயக்குமார் அவர்களுடன் நெருங்கி செயலாற்றியதுடன் அவருடைய பணிகள் பலவற்றை தமிழ் அமைப்பாகிய தென் துருவ தமிழ்ச் சங்கத்தின் ஊடாக பல நாடுகளுக்கு கொண்டு செல்வதில் பெரும்பங்கு ஆற்றியிருந்தார். பப்புவா நியூ பிணியில் தான் பணியாற்றிய போது இருந்த தொடர்புகளை விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் பயன்படுத்தியிருந்தார். அவ்வாறே மலேசியா நாட்டில் பணியாற்றியபோதும், அங்கும் தாயக மக்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் நிதி சேர்க்கும் பணிகளை மாமனிதர் ஜெயக்குமாருக்காக அவரின் அறிவுறுத்தலின் கீழ் செயற்படுத்தி வந்திருந்தார்.
மேலும், மெல்பேர்ணில் தமிழ்ப் பாடசாலைகளில் தமிழை ஒரு பாடமாக கற்க பாடஅட்டவணையில் ஏற்றுக்கொள்ளவதற்கான வேலைத்திட்டத்தில் பங்காற்றியிருந்தார். அத்தோடு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தமிழ்ச் சமூகப் பிரதிநிதியாக கலந்து கொண்டு தமிழுக்கும் தமிழருக்குமான இடத்தை உறுதி செய்வதில் மிக அக்கறையாக பணியாற்றி வெல்பேர்ண் இமிகிரேஷன் மியூசியம் என்பனவற்றில் தமிழர் வரலாறு குறித்த பதிவுகளை பதிவுசெய்திருந்தார். மெல்பேர்ணில் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத இயக்கத்திற்கு நிதி சேகரித்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்ற பொழுது, விடுதலைப் போராட்டத்தின் நியாயத்துவத்தை நீதிமன்றத்தில் நிறுவுவதற்கு தேவையான ஆவணங்கள் ஆலோசனைகள் என்பனவற்றை வழக்கறிஞர்களுக்கு வழங்குவதில் மிகவும் அக்கறையாக செயல்பட்டு வந்திருந்தார்.
தான், தனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுவிடும் எம்மில் பலர் இருக்க, தான் சார்ந்த சமூகம் தமிழர் நீதிக்கான போராட்டம் என்று ஒரு பரந்துபட்ட எண்ணத்துடனும் செயலாற்றலுடனும் பணியாற்றியிருந்தார். தன்னுடைய தனிப்பட்ட நலன், பாதிக்கப்பட்டு இருந்த உடல்நிலை என்பனவற்றை விட சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு தனது நேரங்களை அவற்றிற்காக செலவழித்ததுடன் அது குறித்த செயற்பாட்டிலும் எண்ணத்திலும் தன் வாழ்வின் பெரும்பகுதியை கழித்திருந்தார்.
தமிழ்த்தேசியப்பற்றாளர் சின்னத்துரை கதிர்காமத்தம்பி (13-01-1942 - 12-10-2014)
=========================================================================
நீண்டகாலமாக தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளராக விளங்கிய திரு. கதிர்காமத்தம்பி அவர்கள் எல்லோராலும் அன்பாக கதிர் அண்ணா என அழைக்கப்பட்டார். பல்வேறு தளங்களில் எமது விடுதலைப் போராட்டத்துக்கான தனது பணியை மிகுந்த அர்ப்பணிப்போடு ஆற்றிவந்த கதிர் அண்ணா தாயகம் சென்றிருந்தபோது அங்கே, தனது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையில் உயிர் நீத்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழினத்துக்கும் தீவிரமாகப் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக விளங்கிய கதிர் அண்ணா விளங்கினார்.
அத்தோடு கலையிலக்கியப் பங்களிப்பு, தாயகம் சென்று மருத்துவத் துறையில் அவரது பங்களிப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தொடக்ககாலச் செயற்பாடுகளில் அவரது ஆளுமை, 30 ஆண்டுகளாக மெல்பேணில் நிகழ்த்தப்பட்டுவரும் ‘இன்னிசை மாலை’ என்ற இசை நிகழ்வில் அவரது பங்களிப்பு என பரந்துபட்ட தளங்களில் கதிர்அண்ணா ஆற்றிய செயற்பாடுகள் அனைவராலும் நினைவுகூரப்படுகின்றது.
தமிழ்த்தேசியப்பற்றாளர் தெட்சணாமூர்த்தி நித்தியகீர்த்தி (04-03-1947 - 15-10-2009)
========================================================================
நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியிலும் அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்த காலப்பகுதியிலும் தமிழ்த்தேசிய அரசியல்பணியில் நேரடியாக ஈடுபட்ட ஒருவராக அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராகவும் அதன் பின்னர் விக்ரோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்தலைவராகவும் செயற்பட்டிருந்த அவர், அதன் பின்னர், அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் அரசியல் செயற்பாட்டாளராகவும் தனது பணியை ஏற்றிருந்தார்.
அத்தோடு, நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
அனைவராலும் மதிக்கப்பட்ட பல்துறை ஆளுமையாகவும் தமிழ்த்தேசியப்பணியில் பற்றுக்கொண்டவராகவும் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தேசியப்பற்றாளர் பவளராணி கனகசபேசன் (17-02-1957 - 07-04-2017)
======================================================================
மெல்பேர்ணில் பவளம் அக்கா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர், பெண்கள் செயற்பாட்டாளராக தமிழ்த் தேசியப்பணியில் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கிவந்திருந்தவர். இறுதிப்போர்க்காலத்தில் மெல்பேர்ணில் நெருக்கடி நிலையால் பலரும் ஒதுங்கியிருந்தபோதும் இவர் தொடர்ந்து தமிழ்த்தேசியப்பணியில் பங்களித்து வந்தவர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் ஏற்பாடு செய்யப்படும் நாடகங்கள் கலைவெளிப்பாடுகளில் மெல்பேணிலும் கான்பராவிலும் உணர்வோடு பங்களித்து நின்றவர்.
மேலும் தமிழ் அகதிகள் மெல்பேண் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு உணவுகளை அடிக்கடி கொண்டுசென்று வழங்கிவந்தவர். அவர்களது திருமணங்களிலும் அவர்களுக்கு தத்தம் கொடுப்பவராக எப்போதும் நெருக்கமானவராக இருந்தவர். தமிழ்த்தேசியயத்திற்கான பணியில் புலம்பெயர்வாழ்வில் குடும்பப்பெண்ணாக தனது உயர்ந்தபட்ச பங்களிப்பை எப்போதும் வழங்கி நின்றவர் பவளம் அக்கா.
No comments:
Post a Comment