சிங்களப்பேரினவாத அரசுகளினால் காலத்திற்குக்காலம் தமிழ்மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின்போது பலியாகிய தமிழ்மக்களையும் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அரசபடைகள் மேற்கொண்ட இனவழிப்புப்போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வு முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் 15வது ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மெல்பேர்ண் நகர மத்தியில் அமைந்துள்ள சென்ஜூட்ஸ் மண்டபத்தில் 18-05-20204 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. கொற்றவன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பொதுச்சுடரினை முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் தனது தாயாரை இழந்து முள்ளிவாய்க்கால் பேரவலம் அனைத்தையும் கடந்துவந்த திரு. கிரிஷாந்தன் இராஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை சமூகச்செயற்பாட்டாளர் திரு. திலீபன் அமிர்தலிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை இளைய செயற்பாட்டாளர் செல்வன். ஐங்கரதாஸ் இந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அடுத்து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப்போரில் காவுகொள்ளப்பட்ட தமிழ்மக்களின் நினைவாக நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பீடத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இவ் ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்கால் பேரவலங்கள் அனைத்தையும் அன்றைய நாட்களில் ஒரு சிறுவனாக கடந்துவந்த செல்வன். நிலோஜன் செல்வலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப் பீடத்திற்கான மலர்வணக்கம் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் வரிசையாக வந்து நினைவுப்பீடத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. தாயக விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள், இலங்கை இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்கள் ஆகியோர்களை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து வணக்க நடனம் இடம்பெற்றது. நடன ஆசிரியை திருமதி. மீனா இளங்குமரன் அவர்களது நெறியாள்கையில் மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவிகளின் வணக்க நடனம் இடம்பெற்றது. வணக்க நடனமாக "நந்திக்கடலலையே நந்திக்கடலலையே எம்மோடு வந்து பேசலையே எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன்மெளனம் கலைத்து சொல்லலையே......" என்ற பாடலுக்கு மெல்பேர்ண் நடனாலயாப்பள்ளி மாணவிகள் வணக்க நடனத்தை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலிகளின் சிறுதுளியை கவிதையாக வடித்து மாணவிகளான செல்வி. றியா புஸ்ப்பராசா மற்றும் செல்வி. டாறிக்கா தர்மகீர்த்தி ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
அடுத்து ஆங்கிலமொழியிலான சிற்றுரையினை மாணவி செல்வி. பபினா சுதாகரன் அவர்களும் அடுத்து மற்றுமொரு ஆங்கில உரையினை செல்வி. ஜோ அவர்களும் வழங்கினார்கள்.
அடுத்ததாக தாயகத்திலிருந்து எழுத்தாளரும் ஆசிரியருமான திரு. தீபச்செல்வன் அவர்கள் காணொளிப்பதிவு.மூலமாக தமிழர் இனவழிப்பு நினைவு நாளுக்காக வழங்கிய விளக்கமான சாட்சியப் பதிவு அகலத்திரையில் திரையிடப்பட்டது.
இறுதியாக சமூக அறிவித்தல்களுடன் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதிமொழியுடன் மாலை 7.30 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2024 நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றது. நிகழ்வின் நிறைவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment