தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வு சிறப்பான முறையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்றுள்ளது. 18-05-2024 சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு Girraween High School மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பொதுச்சுடரினை, தனது இரண்டு வயதில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்தேறிய மனிதப் பேரவலத்தின் மத்தியில் தப்பி உயிர்பிழைத்த சாட்சியமாக வாழ்ந்துவரும் இளைய செயற்பாட்டாளர் புகேழாவியன் காந்தரூபன் அவர்கள் ஏற்றினார்.
தொடர்ந்து, அவுஸ்திரேலிய பழங்குடிமக்களின் கொடியை சிட்னி தமிழ் மன்றத்தின் செயலாளரும் தமிழ்ச் செயற்பாட்டாளருமான முத்தரசு கோச்சடை அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை இளைய செயற்பாட்டாளர் கவிவேந்தன் பாலகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் மதுசன் குகமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை, தனது ஆறு வயதில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்தேறிய மனிதப் பேரவலத்தின் மத்தியில் தப்பி உயிர்பிழைத்த சாட்சியமாக வாழ்ந்துவரும் இளைய செயற்பாட்டாளர் கதிரினி இரட்ணகுமார் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார். சமநேரத்தில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது சிறுகுழந்தைகளாக உயிர்தப்பிய இளையோரும் ஏனைய இளையோரும் இணைந்து நினைவுச் சுடர்களை ஏற்றினார்கள்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
முதல் நிகழ்வாக "அலைகரை பாடல் இன்று அழும்குரல் புரிகின்றதா..." என்ற பாடலுக்கான நடன நிகழ்வை இளையோர்கள் வழங்கினர். அனைவரது உணர்வுகளை தொடும்விதமாக நடன நிகழ்வு அமைந்திருந்தது.
தொடர்ந்து, தமிழீழத் தாயக மக்களின் வலி சுமந்த வாழ்வை கண்முன் கொண்டுவரும் பாடலான "ஓலம் கேட்டதோ...." என்ற பாடலை கிசோமி சிவநேசன் மிகவும் உணர்வுபூர்வமாக பாடினார்.
அடுத்ததாக, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்பின் சாட்சியமாக உள்ள இளையோரும் புலத்தில் பிறந்த இளையோரும் இணைந்து தமிழர் வலிமிகு இனவழிப்பு நினைவுப் பகிர்வுகளை வழங்கினர். இதனை றேமா கருணைவேந்தன், துளசி செல்வராசா, கலை அன்ரன், கதிரினி இரட்ணகுமார் ஆகியோர் தமது அனுபவங்கள் ஊடாக ஆங்கிலத்திலும் தமிழிலும் பகிர்ந்துகொண்டார்கள்.
அடுத்து வலி தந்த வாழ்வு என்ற தலைப்பிலான சிறு கவிதை ஒன்றை கபிசன் நரேஸ்குமார், வாகீஸ்வரன் தமிழரசன், தஸ்வின் சிவராசா ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து, பசுமைக் கட்சியைச் கட்சியைச் சேர்ந்த Senator David Shoebridge அவர்களும், நியு சவுத் வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Hugh McDermott (Member of the Legislative Assembly of New South Wales) அவர்களும், தோழமையோடு Michael Kolokossia, Executive Director, Armenian National Committee of Australia அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
காணொளி ஊடாக பசுமைக் கட்சியைச் சேர்ந்த Senator and Deputy Leader of the Australian Greens Senator Dr Mehreen Faruqi அவர்களும், நியு சவுத் வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Anthony D'Adam (Member of the New South Wales Legislative Council) அவர்களும் நினைவேந்தல் நாள் பற்றிய உரைகளை வழங்கினர்.
தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய செயற்பாட்டாளரான வன்சிகா அவர்கள் தனது நினைவுப் பகிர்வை உணர்வுபூர்வமாக வழங்கினார்.
நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரை ஏற்புடன் நிகழ்வு இரவு 8.30 இற்கு நிறைவடைந்தது.
இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் வலியையும் உறுதியையும் பிரதிபலிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வுக்கு, Councillor Sameer Pandey – Former Mayor and current Councillor of Parramatta City Council, Councillor Phil Bradley – Current Councillor of Parramatta City Council, Councillor Sarangan Maheswaran - Current Councillor of Strathfield Council, Councillor Raj Data – Current Councillor of Strathfield Council ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment