கரும்புலிகள் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை 05/07/2024 அன்று மாலை 06.00 மணிக்கு St Peters Youth Centre மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை திரு. சண்முகநாதன் வினோதரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழு - தெற்கு அவுஸ்திரேலியா எனும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் முதல் நிகழ்வாக, பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை தமிழ்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. சுதாகரன் வையாபுரி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. அவுஸ்திரேலிய பூர்வீக மக்கள் கொடியினை தெற்கு அவுஸ்திரேலிய நாம்தமிழர் துணை இணைப்பாளர் திரு.டோன் பொஸ்கோ அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய கொடியினை தமிழ்த்தேசிய பற்றாளர்களில் ஒருவரான திரு.தியாகராஜா ராஜ்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடியினை அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் (Australian Tamil Congress) தெற்கு அவுஸ்திரேலிய இயக்குநர் திரு.கிறிஸ்த்தோப்பர் அமல்ராஜ் செலஸ்டீன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து கரும்புலிகளின் நினைவான பொது திருவுருவப்படத்திற்கான பொது ஈகைச்சுடரினை திரு. காண்டீபன் கிட்ணபிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார். அத்தோடு பொது திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை தமிழ்த்தேசிய உணர்வாளர் திருமதி. இந்திர ராஜேஸ்குமார் அவர்கள் அணிவித்தார்.
அடுத்த நிகழ்வாக தாயக விடுதலைக்கான முதல் தடைநீக்கியான கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் திருவுருவப்படத்திற்கான சுடரினை இலங்கைத் தமிழ்ச்சங்கம் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைவர் மருத்துவர். ஜெயச்சாகரன் புண்ணியமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்களது திருவுருப்படத்திற்கு கரும்புலி மேஜர் ரோஸ்மன் அவர்களின் உறவினரான திருமதி. கேதீஸ்வரன் சசிகலா அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கப்டன் மில்லர் அவர்களது திருவுருப்படத்திற்கான மலர்மாலையினை திரு. தங்கத்துரை செல்வநாயகம் அணிவிக்க கப்டன் அங்கயற்கண்ணி அவர்களின் திருவுருப்படத்திற்கு திருமதி. அருணா கார்த்திக் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கான சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்வணக்கமும் நடைபெற்றது.
பின்னர் மேடைநிகழ்வுகள் நடைபெற்றன. மேடை நிகழ்வில் முதலாவதாக வரவேற்பு உரையினை தமிழ்த்தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. சுதாகரன் வையாபுரி அவர்கள் ஆற்றினார்.
அடுத்த நிகழ்வாக கவிதையினை தமிழர் விடுதலை நடுவத்தின் தலைவர் செல்வன். பிரகாஸ்ராஜ் உதயகுமார் அவர்கள் வழங்கினார். இறுதியாக சிறப்புரையினை அவுஸ்ரேலிய தமிழர் பேரவையின் (Australian Tamil Congress) தெற்கு அவுஸ்திரேலியாவின் இயக்குநர் திரு.கிறிஸ்தோப்பர் அமல்ராஜ் செலஸ்டீன் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, கொடியிறக்கத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக நிறைவுபெற்றது. இறுதியில் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment