கரும்புலிகள் நாள் நிகழ்வு சிட்னியில் 05-07-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. Wentworthville Community Centre மண்டபத்தில் மாலை 7 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு கரும்புலிகளுக்கான மலரஞ்சலியை உணர்வுபூர்வமான முறையில் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில், பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் சகோதரன் ஐங்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிசாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திருச்செல்வம் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் திருவருட்செல்வன்/தோழன் அவர்களின் சகோதரன் ஜெயச்செல்வன் அவர்கள் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அகவணக்ககம் நடைபெற்று, நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் கரும்புலி மாவீரர்களுக்கான மலரஞ்சலியை செலுத்தினர்.
தொடர்ந்து கரும்புலிகள் நினைவுப் பாடல்களான "எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது..." என்ற பாடலை பவித்திரன் மகேந்திரன் அவர்களும் "தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா..." என்ற பாடலை சிருஸ்திகா செல்வம் அவர்களும் "இங்குவந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்....." என்ற பாடலை ஜெய்கரன் அவர்களும் பாடினர்.
கரும்புலிகள் பற்றிய பேச்சு ஒன்றினை கார்த்திக் பிரபாகர் அவர்களும், தொடர்ந்து சுஜிர்த்தனா பிரதீபன் மற்றும் அபிசயா மதிவதன் இணைந்து இன்னொரு பேச்சினையும் வழங்கினர்.
கரும்புலிகள் பற்றி வியாசன் அவர்கள் எழுதிய கவிதையை சுலோஜனா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, கபிசன் நரேஸ்குமார் மற்றும் வாகீஸ்வரன் தமிழரசன் ஆகியோர் இணைந்து இன்னொரு கவிதையை வழங்கினர்.
கரும்புலிகள் பற்றிய நினைவுப் பகிர்வை முன்னாளர் போராளியும் அரசியல் செயற்பாட்டாளருமான தேசிகன் அவர்களும், விடுதலைப் புலிகள் பத்திரிகையில் பகிரப்படாத பக்கங்களை பதிவு செய்த ஆநதீ அவர்களும் வழங்கினர்.
இரவு 8.30 மணி வரை தொடர்ந்த நினைவேந்தல் நிகழ்வு, தேசியக்கொடிகள் இறக்கி வைக்கப்பட்டு உறுதியுரையோடு நிறைவுபெற்றது. வேலை நாளாக இருந்தபோதும், பலரும் உணர்வோடு பங்குகொண்ட மண்டபம் நிறைந்த நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment