தமிழீழ மாணவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளின் குறியீட்டு வடிவமாக, செஞ்சோலை வளாகப் படுகொலை நடைபெற்ற நினைவு நாளான 14-08-2024 புதன்கிழமை அன்று - இனவழிப்புப்போரில் கொல்லப்பட்ட அனைத்து மாணவர்களையும் நினைவுகூரும் விதமாக "செஞ்சோலை நினைவேந்தல்" வணக்க நிகழ்வு சிட்னியில் துங்காபி சனசமூக மண்டபத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொதுச்சுடரினை செஞ்சோலை வளாக படுகொலையில் உயிரிழந்த முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவிகளான மார்க்குப்பிள்ளை கேலன்சுதாயினி மற்றும் சிவானந்தம் திவ்யா ஆகியோரின் சிறிய தந்தையாரான சங்கர் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை இளம்செயற்பாட்டாளர் தமிழ்ச்செல்வன் செல்வகுமார் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சதீஸ் தியாகராசா அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரினை செஞ்சோலை வளாக படுகொலையில் உயிரிழந்த உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவி நாகலிங்கம் கோகிலா அவர்களின் சகோதரன் நாகலிங்கம் தயாகரன் அவர்கள் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து, தமிழீழத் தாயக மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களையும், தேச விடுதலைக்காக உழைத்து மறைந்த மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் தமிழ்த் தேசியப்பற்றாளர்களையும், இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும், சுதந்திரமான வாழ்வுக்காக, தமிழர்களின் நிலம், மொழி, கலை மற்றும் பண்பாட்டு விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த அனைத்து தியாகிகளையும், கொடிய இனவழிப்பில் கொல்லப்பட்ட தமிழீழ மண்ணின் எதிர்காலச் சந்ததிகளாக இருந்த மாணவர்கள் அனைவரையும் நினைவில் இருத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுப் பகிர்வை உணர்வுபூர்வமாக முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் சக மாணவராக கல்வி கற்றிருந்த தனுசாந்த் அவர்கள் வழங்கினார். தமிழர் இனவழிப்பில் ஏனைய இடங்களில் மாணவர்கள் இலக்குவைக்கப்பட்டு கொல்லப்பட்ட இனப்படுகொலைகள் பற்றி குவேந்திரன் அவர்கள் தனது பதிவை வழங்கினார். தொடர்ந்து, தமிழீழ மாணவர் எழுச்சி நாள் என நினைவு கூரப்படும் பொன் சிவகுமாரன் அவர்களின் தியாக வரலாற்றை காந்திதாசன் அவர்கள் வழங்கினார்.
செஞ்சோலை படுகொலை நினைவுகளைச் சுமந்த புதிய பாடல் ஒன்றை ஜெய்கரன் அவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக பாடினார். இதற்கான பாடல் வரிகளை குவேந்திரன் அவர்கள் எழுதியிருந்தார். தொடர்ந்து, அன்னைத் தமிழீழ மண்ணே என்ற பாடலை கமலநாதன் அவர்கள் தமிழீழ மண்ணின் நினைவுகளை மீட்டும் வகையில் உணர்வுபூர்வமாக பாடினார்.
இந்நிகழ்வில், மன்னார்-வட்டக்கண்டல் மாணவர் படுகொலை, அம்பாறை-வீரமுனை படுகொலை, திருமலை-நகர மாணவர் படுகொலை, நாகர்கோவில்-மாணவர் படுகொலை, செம்மணிப் படுகொலை என மாணவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட பல படுகொலைகள் பற்றிய விபரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிபபிடத்தக்கது.
No comments:
Post a Comment