கேணல் கிட்டு உற்பட பத்து வேங்கைகளின் ஞாபகார்த்த விளையாட்டு விழாவானது மிகவும் சிறப்பாக தெற்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. தமிழ் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழுவால் சகோதர அமைப்புக்களின் ஆதரவோடு இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
தெற்கு அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக இம்முறை இவ்விழா நடந்தேறியிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 19/01/2025 அன்று காலை 11 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் வயது வேறுபாடின்றி பலரும் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர். மிகக்கடுமையான வெயில் நிலவியபோதும் மக்கள் அதனை பொருட்படுத்தாது, உணர்வோடும் ஆர்வத்தோடும் பங்கு பற்றி, பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்திருந்தனர்.
பூர்வகுடி மக்களுக்கான மதிப்பளிப்போடு ஆரம்பான நிகழ்வு, தேசிய கொடியேற்றல்கள், கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளுக்கான வணக்க நிகழ்வு ஆகியவற்றோடு தொடங்கியது.
ஆதிபகவன் மாதம் என்பதால் சூரியனை வணங்கும் முகமாக பானையில் மக்களின் பங்களிப்போடு தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கப்பட்டது.
தாயகத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு மற்றும் கயிறிழுத்தலில் வீர வீராங்கனைகள் வெயிலுக்கு மத்தியிலும் காட்டிய ஆர்வமும் ஆக்கிரோஷமும் மெய் சிலிர்க்க வைத்தது.
மைதான அலங்கரிப்பு தாய் மண்ணில் நிற்பதை போல் உள்ளதாக மக்கள் சொல்லி சிலாகித்தனர்.
இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் , வெற்றிக்கிண்ணங்கள், வெற்றி கேடயங்கள் போன்றன வழங்கப்பட்டன.
வரலாற்றின் தொடக்கத்தை வெற்றிகரமாக முடித்த களிப்போடு தேசிய கொடிகளை இறக்கி நிகழ் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment