தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் அன்னை பூபதி அவர்களின் 37வது வருட நினைவு நாள் நிகழ்வும் சனிக்கிழமை 19-04-2025 அன்று சிட்னியில் நடைபெற்றுள்ளது. Greystane Community Centre நடைபெற்ற இந்நிகழ்வில் மாலை 5 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மாமனிதர் தில்லை ஜெயகுமார் அரசறிவியல் கல்விக்கூடத்தினால் இளையோர்களுக்கான அன்னை பூபதி பொது அறிவுத் தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நினைவு வணக்க நிகழ்வு மாலை 6 மணிக்கு ஆரம்பமானது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மகளீர் செயற்பாட்டாளர் சுலோஜனா நடராஜா அவர்கள் நினைவு வணக்க நிகழ்வினை தொகுத்து வழங்க, நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை இளையோர் செயற்பாட்டாளர் றேமருதா கருணைவேந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை இளையோர் செயற்பாட்டாளர் பிறைக்குமரன் பேரின்பராசா அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, அன்னை பூபதி அவர்களினதும் ஏனைய நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப் படங்களுக்கு, அன்னை பூபதி அவர்களின் பேரன் சர்மிலன் நடராஜா ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து, தாயக விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும், தமிழீழ மக்களின் உயிர் வாழ்வுக்கான போராட்டத்தில் உறுதுணையாக நின்று பங்களித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் தேசப்பற்றாளர்களையும், எமது மக்களின் விடுதலைக்காக தமிழீழத்திற்கு வெளியே தீயிலே குளித்து ஈகைச்சாவடைந்த ஈகியர்களையும், ஏனைய தியாகிகளையும் நினைவு கூர்ந்தும், போராட்டத்தின் பால் உயிர் நீத்த அனைத்து பொதுமக்களையும் நினைவில் சுமந்தும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து செல்வி அபிசயா மதிவதன் அவர்கள் "அன்னை பூபதி அணையா தீபம்..." என்ற நினைவுப்பாடலை பாடினார். அதனைத் தொடர்ந்து செல்வி வினுசா சதீஸ்வரன் அவர்கள் அன்னை பூபதி நினைவு சுமந்த சிறுகவிதையினை வழங்கினார். தொடர்ந்து, அன்னை பூபதி அவர்கள் தொடர்பான கவிதை ஒன்றினை திருமதி சர்மிளா கீதன் அவர்கள் வழங்கினார்.
அதன் பின்னர், பொது அறிவுப்போட்டியில் பங்குபற்றிய அனைவரும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நாட்டுப்பற்றாளர் நாள் நினைவு தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னிப் பொறுப்பாளர் ஜனா சிவராம் அவர்கள் உரையாற்றினார்.
இறுதியில் தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு உறுதியுரையோடு நிகழ்வு இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment